• அன்புராஜ் அண்ணன் குறித்த காணொளியை ஒரு ஆறு வருடங்களுக்கு முன்பாக சமூக வலைதளத்தில் பார்த்தேன். இள வயதிலேயே சமூக விடுதலைக்கான போராட்டத்தை சாகச மனநிலையுடன், ஆயுதம் ஏந்தி வீரப்பனுடன் காடுகளில் தன் வாழ்க்கை பயணத்தை தொடங்கியுள்ளார். காடு மலை விலங்குகள் என அவற்றின் ஊடாகவே தன் வாழ்வியலை தகவமைத்துக் கொண்டார். காட்டுயிர் குறித்தான புறிதலை தீவிரமாக உள்வாங்கிக் கொண்டார். அதன் பின்னர் தான் தேர்ந்தெடுத்த வாழ்க்கை பாதை தவறு என உணர்ந்து வெளிவர முயல்கையில் கைதியாக சிறை சென்றார். சிறையில் தோழர் வி பி ஜி ஐயாவுடன் தோழமை ஏற்பட்டு அவரை தனது குருவாக ஏற்றுக் கொண்டார். அவரது வழிகாட்டுதலில் மார்க்சியம் குறித்தும், பழங்குடி மக்களின் விடுதலை குறித்தும் ஒரு ஆழமான புரிதல் உருவானது. சிறைக் கைதிகளுடன் இணைந்து புரட்சிகரமான நாடகங்களையும் நிகழ்த்தியுள்ளார்.

    மானுடத்தின் அத்தனை கீழ்மையான செயல்களையும் அதிகார வர்க்கம் சிறைச்சாலையில் நிகழ்த்தியதை கண்டு துடித்தெழுந்தார். மரணத்தின் விளிம்பு வரை சென்றும் மானுடத்தின் மீது நம்பிக்கை குன்றவில்லை. விடுதலை அடைந்து வீடு திரும்பி ரேவதி அக்காவுடன் இணைந்து இல்வாழ்க்கையை தொடங்கினார். இன்று அந்தியூரை சுற்றியுள்ள மலை கிராமங்களில் உள்ள விவசாயிகளிடமிருந்து இயற்கை முறையில் விளைந்த தானியங்கள், உணவுப் பொருட்கள். தேன் என ஆரோக்கிய வாழ்வு காண அத்தனை பொருட்களையும் ஒற்றை கூரையின் கீழ் ஐந்திணை அங்காடியில் மக்களுக்கு வழங்கி வருகிறார்.

    அன்புராஜ் அண்ணனை முதல் முறையாக ஈரோடு சித்தார்தா பள்ளியில், குக்கூ முகம் விருது 2022, விருது ஏற்பாளராக சந்தித்தேன். அதற்கு முன்னர் பலமுறை தொலைபேசி உரையாடலில், தும்பி மாத இதழுக்காக பலரிடம் இருந்து சந்தா திரட்டி தந்துள்ளார். தன்னறம் நூல் வெளியிலிருந்து சூழலியல் மற்றும் நம்மாழ்வார் குறித்தான புத்தகங்களை தனது நண்பர்களுக்கு வாங்கி பரிசளித்துள்ளார். முகம் விருது நிகழ்வில் அவர் ஆற்றிய உரை இன்னும் மனதில் உள்ளது. சிறைச் சுவர்களுக்கு உள்ளே இருப்பவர்கள் அனைவரும் குற்றவாளிகள் அல்ல. சந்தர்ப்பவாதத்தால் செய்த பிழையால் ஒட்டுமொத்த வாழ்வையும் காலத்தின் காலடியில் ஒப்படைத்துவிட்டு உறவுகளைப் பிரிந்து மடியும் உயிர்களுக்கு அவ்விருதையை சமர்ப்பணம் செய்தார். நிகழ்வு முடிந்து விடை பெருகையில், தோழர், என என்னை இறுக்க அணைத்துக் கொண்டார். கண் கலங்கி நின்றேன்.


    பழங்குடிகளுக்கான ஒர் மையம் என்பது அன்பு ராஜ் அண்ணனின் நீண்ட நாள் கனவு. அதன் விழைவாக ‘கற்றளி’ தொல்குடி அற்றசாலை என்னுமிடத்தை கடந்த மே 31 அன்று புதுப்பாளையம் அந்தியூரில் நண்பர்கள் உதவியுடன் துவங்கினார் . தொடங்குவதற்கு ஒரு மாத காலம் முன்பே இடத்தை தேர்வு செய்து, சுத்தம் செய்து, பொருட்களை தயார் செய்தோம். வெவ்வேறு பதிப்பகங்களில் இருந்து சூழலியல், மானுடவியல், கலை, இலக்கியம் என பல்வேறு துறைகளிலும் இருந்து நூல்களை சேகரித்தோம்.


    சிறப்பு விருந்தினராக, என்றும் மாறா புன்னகையும், குழந்தை மனதும், கொண்ட எங்கள் அறச்செயல்களுக்கு எல்லாம் வலிமை சேர்க்கும் அக்னி தங்கவேல் ஐயா அவர்கள் நிகழ்வில் பங்கேற்றார். கற்றளி என்பது தான் கற்ற கல்வியை மற்றவர்களுக்கு பகிர்ந்து அளிப்பதற்கான இடமாக இருக்கும் என நம்புகிறேன் என்று சித்தார்த்தா பள்ளியின் தாளாளர் திருமதி ஜெ. ஜெயபாரதி அம்மா உரையாற்றினார். மற்றும் மானுடவியலாளர் பக்தவச்சல பாரதி அவர்கள் தமிழரின் தொன்மை, கீழடி முதல் சிந்து சமவெளி வரை அறுபடாமல் சமத்துவமாக பரவியுள்ளதை சுட்டிக் காட்டினார். ‘பல்லுயிர் சூழலின் பிரதான கன்னி பழங்குடிகளே’ என சூளுரைத்த மாதவ் காட்கே அவர்களின் நினைவாக. மாதவ் காட்கில் நினைவு விருதை சூழல் செயல்பாட்டாலும் உயிர் பதிப்பகத்தின் ஆசிரியருமான ஏ‌.சண்முகநாதன் அவர்களுக்கு வழங்கினோம். இறுதியாக அந்தியூரை சுற்றியுள்ள மலை கிராமங்களில் இருந்து அன்புராஜ் அண்ணனின் வழிகாட்டுதலில், குடும்பத்தின் முதல் இளங்கலை பட்டப் படிப்பை மேற்கொண்ட கல்லூரி மாணவர்களை கௌரவப்படுத்தினார்.

    நிகழ்ச்சி முடிந்த பின்னர் அனைவரும் அமர்ந்து கற்றளியின் அடுத்தகட்ட செயல் திட்டம் குறித்து விரிவாக விவாதித்தோம். பழங்குடி மக்களின் வாழ்வியலை ஆவணப்படுத்தி அதை பாதுகாப்பாக அம்மக்களிடமே கையளிக்க வேண்டியது அவசியம் என்றும். அவர்களுக்கு அளிக்கப்படும் நவீனகல்வி மற்றும் வேலைவாய்ப்பு எவ்வகையிலும் அவர்களது வாழ்வியலுக்குள் இருக்கும் இறையாண்மையை அழிந்து விடாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், அவற்றிற்கு வலு சேர்க்கும் விதமாக கற்றளியில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் அமைய வேண்டும் என்று உறுதிபூண்டோம்.

    புகைப்படங்கள்: மோகன் தனிஷ்க். அய்யலு குமரன்.

  • அரவிந்த் குப்தா அவர்கள் குக்கூ காட்டுப்பள்ளி திறப்பு விழாவிற்கு வந்திருந்த பொழுது, அவரை அழைத்து கொண்டு புளியனூர் கிராமத்திற்கு சென்றோம். அங்கு நானும் பொன்மணியும் நண்பர்கள் உதவியுடன் ஒரு தையல் பள்ளி தொடங்குவதற்கான முன்னேற்பாடுகள் செய்து வைத்திருந்தோம். நான்கு தையல் இயந்திரங்கள் கொண்ட அழகான சிறு ஓட்டு வீடு. அதனை திறந்து வைத்து தீபம் ஏற்றி எங்களுடன் உரையாடினார். இந்த தையல் பள்ளி துவங்குவதற்கான காரணத்தை சிவராஜ் அண்ணன் தவிப்புடன் கூற அதனை கௌஷிக் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அரவிந்த் குப்தா அவர்களிடம் கூறினார். இந்த கிராமப் பகுதியில் உள்ள பெரும்பாலான பெண்கள் இளவயதிலேயே திருமணம் முடித்து குழந்தைகள் பெற்று, பெரியவர்களிடம் ஒப்படைத்து விட்டு நகர்புறத்தில் வேலைக்கு செல்கின்றனர். பெற்றோர்களின் அரவணைப்பின்றி குழந்தைகள் வளர்கின்றனர். இதனை தடுக்கும் விதமாக கிராம பெண்களுக்கு அடிப்படை தையல் பயிற்சிகளை அளிப்பதன் மூலம் அவர்களது வாழ்வாதாரமும் குடும்ப சூழலும் பலம் பெறும் என்று உறுதியாக நம்பினோம். அதன் தொடர்ச்சியாக சிறு துணிப்பைகள். பொம்மைகள், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான தூய பருத்தி ஆடைகளை வடிவமைத்தோம்.

    பின்பு அடுத்தடுத்து ஏற்பட்ட சூழல் மற்றும் பொருளாதார நெருக்கடியாலும் எங்களால் அந்த செயலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த இயலவில்லை. சிறு குழுவாக இயங்கிய பெண்களை மாபெரும் இயக்கமாக மாற்ற நினைத்தோம். ஆனால் வாழ்வின் அடுத்த கட்ட பயணத்திற்கும், சுய தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் பெரும் பொழுதுகளை கொடுக்க வேண்டியதாக இருந்தது. மணவாழ்க்கை, குடும்பம் குழந்தைகள் என அடுத்தகட்ட நகர்வினால் பெரும் செயலுக்கு எங்களை ஒப்புக் கொடுக்க இயலவில்லை.

    எட்டு வருட காத்திருப்பிற்க்கு பின் இதோ இன்று குக்கூ காட்டு பள்ளியில் நெசவுக்கும், தையலுக்குமான சிறு குடிலை காலத்தின் கருணையால் கட்டி எழுப்பி உள்ளோம். மீண்டும் பொன்மணியின் வருகையால் அந்த தையல் இயந்திரங்களை பழுது பார்த்து, கடந்த மகளிர் தினத்தன்று ராஜி அக்காவின் கரங்களால் சுடர் ஏற்றி, தயா மலர் பாப்பாவின் கரங்களில் இருந்து துணி பைகளை பரிசாக பெற்று அனைவர் முன்னிலையிலும் பெரும் செயலுக்கான முதல் அசைவை துவங்கியுள்ளோம்.

    கடந்த சில வருடங்களாகவே குக்கூ காட்டு பள்ளியில் பாத அழுத்த சிகிச்சை மூலம் நோய்மையிலிருந்து விடுபட்ட ஆரோக்கிய மனிதர்கள் ஏராளம். அவர்களது தைரியமும் தன்னம்பிக்கையுமே எங்களை இன்றும் வழிநடத்துகிறது. அதற்கு இணையான ஒத்திசைவாகவே இந்த தையலகத்திலிருந்து உற்பத்தியாகும் பொருட்கள் கிராம சுயராஜியத்திற்கான பாதையை உருவாக்கும் என நம்புகிறோம்.
    நாங்கள் வேண்டுவதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். இந்த மலையடிவாரத்தின் இயற்கை சூழலில் தான் கற்ற கல்வியையும் தையல் சார்ந்த நுட்பங்களையும், இந்த எளிய கிராம பெண்களிடம் கடத்துவதற்கு எங்களுடன் கைகோர்த்து பயணிக்க, எங்களை வழிநடத்த தையல் சார்ந்த அடுத்த கட்ட கட்டமைப்புகளையும், பயிற்சிகளையும் வழங்கிட ஓர் ஆசிரியர் தேவைப்படுகிறார். இதை தேர்ந்தெடுத்து எங்களுடன் பயணித்து தான் கற்ற கல்வியை எங்களுடன் பகிர்வதன் மூலம் மிகப் பெரும் அக விடுதலையை அடைவீர்கள். உங்களது வழிகாட்டுதலின் மூலம் ஒர் சமூகம் தன்னிறைவு அடையும் என்பது உறுதி. நன்றி.

    புகைப்படங்கள்: அர்வின்

  • பிங்க் நிற திரைச்சிலையை விளக்கியபடி எட்டிப் பார்க்கும் ஒரு நிர்வாண பாலகனின் முழு நீள கண்ணாடி ஓவியத்தை பார்ப்பதற்காகவே அப்பாவுடன் சலூன் கடைக்கு சிறு வயதில் சென்று இருக்கிறேன். ஓவியங்கள் மீதான பிரேமை அப்போதிலிருந்து தான் தொடங்கி இருக்க வேண்டும். இன்று வரை கவிதைக்கு இணையாகவே ஓவியங்களை இன்னும் எத்தனை விதமாக விரித்துப் பார்க்கலாம் என மனம் ஏங்கும்.


    நேற்று உக்கிரமான மத்திய பொழுதில் ஐவர் படையென சிவராஜ் அண்ணா உடன் கிளம்பி சித்தன்னவாசல் குகை ஓவியத்தை காண மலையேறினோம். ஒற்றை கழுகு விண்ணில் வட்டமடித்துக் கொண்டே குகை ஓவிய சிகரத்தின் மேல் பறந்து கொண்டிருந்தது. குகையில் உள் நுழைந்ததும் இரு தூண்களிலும் சுண்ணாம்பு பூச்சில் சிதிலமடைந்த ஓவியமும், மேல்சுவரில் உதிர்ந்தது போக எஞ்சிய ஓவியங்களில் அன்னப்பறவைகள், பசு, யானை, தாமரை மலர்கள், மகர மீன்கள், அன்றில் பறவைகள் என பனிரெண்டாம் நூற்றாண்டின் ஒரு பசுமையான காட்சி சித்திரத்தை சுண்ணாம்பில் ஈரம் காய்வதற்கு முன் இயற்கை வண்ணங்கள் கொண்டு தீட்டியுள்ளனர். ஏறத்தாழ நாலு லட்சம் இரவு பகல்களை கடந்து இன்றும் தன்னை காணவரும் மானுடர்களுக்கு காட்சியளிக்கிறது. ஓவியநெலிவுகளை அமைதியாக உள்வாங்கிக் கொண்டு சற்று நேரம் கண் மூடி அமர்ந்து கொண்டேன். தன்னுணர்வை இழக்கும் இது போன்ற தருணங்கள் எப்போதேனும் ஏற்படுவது உண்டு.

    பின்னர் குகையில் இருந்து வெளியே வந்து சமகாலத்தில் கால் வைத்து அண்ணன்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு மலை இறங்கியதும் மனம் லேசானது. மண்ணைப் பிளந்து சமதளத்தில் இருந்து மெல்ல மெல்ல மேலெழுந்த பூமியின் பிள்ளைகள் மலைகள். மலை உச்சி என நாம் அண்ணாந்து பார்க்கும் உயரங்கள் யாவும் லட்சம் ஆண்டுகளுக்கு முன் சிறு தளிரென மண்ணில் முளைத்தவையே. இந்த உண்மையை ஒவ்வொரு மலையை காண்கையிலும் காலத்தின் முன் நாம் ஒரு துகள் என எண்ணி கைகூப்பி அழுதிருக்கிறேன். அதற்கு இணையான மன எழுச்சியையே இந்த சித்தன்னவாசல் ஓவியங்கள் அருளியது.

    புகைப்படங்கள்: மோகன் தனிஷ்க். அய்யலு குமரன்.