
அரவிந்த் குப்தா அவர்கள் குக்கூ காட்டுப்பள்ளி திறப்பு விழாவிற்கு வந்திருந்த பொழுது, அவரை அழைத்து கொண்டு புளியனூர் கிராமத்திற்கு சென்றோம். அங்கு நானும் பொன்மணியும் நண்பர்கள் உதவியுடன் ஒரு தையல் பள்ளி தொடங்குவதற்கான முன்னேற்பாடுகள் செய்து வைத்திருந்தோம். நான்கு தையல் இயந்திரங்கள் கொண்ட அழகான சிறு ஓட்டு வீடு. அதனை திறந்து வைத்து தீபம் ஏற்றி எங்களுடன் உரையாடினார். இந்த தையல் பள்ளி துவங்குவதற்கான காரணத்தை சிவராஜ் அண்ணன் தவிப்புடன் கூற அதனை கௌஷிக் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அரவிந்த் குப்தா அவர்களிடம் கூறினார். இந்த கிராமப் பகுதியில் உள்ள பெரும்பாலான பெண்கள் இளவயதிலேயே திருமணம் முடித்து குழந்தைகள் பெற்று, பெரியவர்களிடம் ஒப்படைத்து விட்டு நகர்புறத்தில் வேலைக்கு செல்கின்றனர். பெற்றோர்களின் அரவணைப்பின்றி குழந்தைகள் வளர்கின்றனர். இதனை தடுக்கும் விதமாக கிராம பெண்களுக்கு அடிப்படை தையல் பயிற்சிகளை அளிப்பதன் மூலம் அவர்களது வாழ்வாதாரமும் குடும்ப சூழலும் பலம் பெறும் என்று உறுதியாக நம்பினோம். அதன் தொடர்ச்சியாக சிறு துணிப்பைகள். பொம்மைகள், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான தூய பருத்தி ஆடைகளை வடிவமைத்தோம்.


பின்பு அடுத்தடுத்து ஏற்பட்ட சூழல் மற்றும் பொருளாதார நெருக்கடியாலும் எங்களால் அந்த செயலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த இயலவில்லை. சிறு குழுவாக இயங்கிய பெண்களை மாபெரும் இயக்கமாக மாற்ற நினைத்தோம். ஆனால் வாழ்வின் அடுத்த கட்ட பயணத்திற்கும், சுய தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் பெரும் பொழுதுகளை கொடுக்க வேண்டியதாக இருந்தது. மணவாழ்க்கை, குடும்பம் குழந்தைகள் என அடுத்தகட்ட நகர்வினால் பெரும் செயலுக்கு எங்களை ஒப்புக் கொடுக்க இயலவில்லை.
எட்டு வருட காத்திருப்பிற்க்கு பின் இதோ இன்று குக்கூ காட்டு பள்ளியில் நெசவுக்கும், தையலுக்குமான சிறு குடிலை காலத்தின் கருணையால் கட்டி எழுப்பி உள்ளோம். மீண்டும் பொன்மணியின் வருகையால் அந்த தையல் இயந்திரங்களை பழுது பார்த்து, கடந்த மகளிர் தினத்தன்று ராஜி அக்காவின் கரங்களால் சுடர் ஏற்றி, தயா மலர் பாப்பாவின் கரங்களில் இருந்து துணி பைகளை பரிசாக பெற்று அனைவர் முன்னிலையிலும் பெரும் செயலுக்கான முதல் அசைவை துவங்கியுள்ளோம்.

கடந்த சில வருடங்களாகவே குக்கூ காட்டு பள்ளியில் பாத அழுத்த சிகிச்சை மூலம் நோய்மையிலிருந்து விடுபட்ட ஆரோக்கிய மனிதர்கள் ஏராளம். அவர்களது தைரியமும் தன்னம்பிக்கையுமே எங்களை இன்றும் வழிநடத்துகிறது. அதற்கு இணையான ஒத்திசைவாகவே இந்த தையலகத்திலிருந்து உற்பத்தியாகும் பொருட்கள் கிராம சுயராஜியத்திற்கான பாதையை உருவாக்கும் என நம்புகிறோம்.
நாங்கள் வேண்டுவதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். இந்த மலையடிவாரத்தின் இயற்கை சூழலில் தான் கற்ற கல்வியையும் தையல் சார்ந்த நுட்பங்களையும், இந்த எளிய கிராம பெண்களிடம் கடத்துவதற்கு எங்களுடன் கைகோர்த்து பயணிக்க, எங்களை வழிநடத்த தையல் சார்ந்த அடுத்த கட்ட கட்டமைப்புகளையும், பயிற்சிகளையும் வழங்கிட ஓர் ஆசிரியர் தேவைப்படுகிறார். இதை தேர்ந்தெடுத்து எங்களுடன் பயணித்து தான் கற்ற கல்வியை எங்களுடன் பகிர்வதன் மூலம் மிகப் பெரும் அக விடுதலையை அடைவீர்கள். உங்களது வழிகாட்டுதலின் மூலம் ஒர் சமூகம் தன்னிறைவு அடையும் என்பது உறுதி. நன்றி.
புகைப்படங்கள்: அர்வின்
Leave a comment