அன்புராஜ் அண்ணன் குறித்த காணொளியை ஒரு ஆறு வருடங்களுக்கு முன்பாக சமூக வலைதளத்தில் பார்த்தேன். இள வயதிலேயே சமூக விடுதலைக்கான போராட்டத்தை சாகச மனநிலையுடன், ஆயுதம் ஏந்தி வீரப்பனுடன் காடுகளில் தன் வாழ்க்கை பயணத்தை தொடங்கியுள்ளார். காடு மலை விலங்குகள் என அவற்றின் ஊடாகவே தன் வாழ்வியலை தகவமைத்துக் கொண்டார். காட்டுயிர் குறித்தான புறிதலை தீவிரமாக உள்வாங்கிக் கொண்டார். அதன் பின்னர் தான் தேர்ந்தெடுத்த வாழ்க்கை பாதை தவறு என உணர்ந்து வெளிவர முயல்கையில் கைதியாக சிறை சென்றார். சிறையில் தோழர் வி பி ஜி ஐயாவுடன் தோழமை ஏற்பட்டு அவரை தனது குருவாக ஏற்றுக் கொண்டார். அவரது வழிகாட்டுதலில் மார்க்சியம் குறித்தும், பழங்குடி மக்களின் விடுதலை குறித்தும் ஒரு ஆழமான புரிதல் உருவானது. சிறைக் கைதிகளுடன் இணைந்து புரட்சிகரமான நாடகங்களையும் நிகழ்த்தியுள்ளார்.

மானுடத்தின் அத்தனை கீழ்மையான செயல்களையும் அதிகார வர்க்கம் சிறைச்சாலையில் நிகழ்த்தியதை கண்டு துடித்தெழுந்தார். மரணத்தின் விளிம்பு வரை சென்றும் மானுடத்தின் மீது நம்பிக்கை குன்றவில்லை. விடுதலை அடைந்து வீடு திரும்பி ரேவதி அக்காவுடன் இணைந்து இல்வாழ்க்கையை தொடங்கினார். இன்று அந்தியூரை சுற்றியுள்ள மலை கிராமங்களில் உள்ள விவசாயிகளிடமிருந்து இயற்கை முறையில் விளைந்த தானியங்கள், உணவுப் பொருட்கள். தேன் என ஆரோக்கிய வாழ்வு காண அத்தனை பொருட்களையும் ஒற்றை கூரையின் கீழ் ஐந்திணை அங்காடியில் மக்களுக்கு வழங்கி வருகிறார்.

அன்புராஜ் அண்ணனை முதல் முறையாக ஈரோடு சித்தார்தா பள்ளியில், குக்கூ முகம் விருது 2022, விருது ஏற்பாளராக சந்தித்தேன். அதற்கு முன்னர் பலமுறை தொலைபேசி உரையாடலில், தும்பி மாத இதழுக்காக பலரிடம் இருந்து சந்தா திரட்டி தந்துள்ளார். தன்னறம் நூல் வெளியிலிருந்து சூழலியல் மற்றும் நம்மாழ்வார் குறித்தான புத்தகங்களை தனது நண்பர்களுக்கு வாங்கி பரிசளித்துள்ளார். முகம் விருது நிகழ்வில் அவர் ஆற்றிய உரை இன்னும் மனதில் உள்ளது. சிறைச் சுவர்களுக்கு உள்ளே இருப்பவர்கள் அனைவரும் குற்றவாளிகள் அல்ல. சந்தர்ப்பவாதத்தால் செய்த பிழையால் ஒட்டுமொத்த வாழ்வையும் காலத்தின் காலடியில் ஒப்படைத்துவிட்டு உறவுகளைப் பிரிந்து மடியும் உயிர்களுக்கு அவ்விருதையை சமர்ப்பணம் செய்தார். நிகழ்வு முடிந்து விடை பெருகையில், தோழர், என என்னை இறுக்க அணைத்துக் கொண்டார். கண் கலங்கி நின்றேன்.
பழங்குடிகளுக்கான ஒர் மையம் என்பது அன்பு ராஜ் அண்ணனின் நீண்ட நாள் கனவு. அதன் விழைவாக ‘கற்றளி’ தொல்குடி அற்றசாலை என்னுமிடத்தை கடந்த மே 31 அன்று புதுப்பாளையம் அந்தியூரில் நண்பர்கள் உதவியுடன் துவங்கினார் . தொடங்குவதற்கு ஒரு மாத காலம் முன்பே இடத்தை தேர்வு செய்து, சுத்தம் செய்து, பொருட்களை தயார் செய்தோம். வெவ்வேறு பதிப்பகங்களில் இருந்து சூழலியல், மானுடவியல், கலை, இலக்கியம் என பல்வேறு துறைகளிலும் இருந்து நூல்களை சேகரித்தோம்.

சிறப்பு விருந்தினராக, என்றும் மாறா புன்னகையும், குழந்தை மனதும், கொண்ட எங்கள் அறச்செயல்களுக்கு எல்லாம் வலிமை சேர்க்கும் அக்னி தங்கவேல் ஐயா அவர்கள் நிகழ்வில் பங்கேற்றார். கற்றளி என்பது தான் கற்ற கல்வியை மற்றவர்களுக்கு பகிர்ந்து அளிப்பதற்கான இடமாக இருக்கும் என நம்புகிறேன் என்று சித்தார்த்தா பள்ளியின் தாளாளர் திருமதி ஜெ. ஜெயபாரதி அம்மா உரையாற்றினார். மற்றும் மானுடவியலாளர் பக்தவச்சல பாரதி அவர்கள் தமிழரின் தொன்மை, கீழடி முதல் சிந்து சமவெளி வரை அறுபடாமல் சமத்துவமாக பரவியுள்ளதை சுட்டிக் காட்டினார். ‘பல்லுயிர் சூழலின் பிரதான கன்னி பழங்குடிகளே’ என சூளுரைத்த மாதவ் காட்கே அவர்களின் நினைவாக. மாதவ் காட்கில் நினைவு விருதை சூழல் செயல்பாட்டாலும் உயிர் பதிப்பகத்தின் ஆசிரியருமான ஏ.சண்முகநாதன் அவர்களுக்கு வழங்கினோம். இறுதியாக அந்தியூரை சுற்றியுள்ள மலை கிராமங்களில் இருந்து அன்புராஜ் அண்ணனின் வழிகாட்டுதலில், குடும்பத்தின் முதல் இளங்கலை பட்டப் படிப்பை மேற்கொண்ட கல்லூரி மாணவர்களை கௌரவப்படுத்தினார்.


நிகழ்ச்சி முடிந்த பின்னர் அனைவரும் அமர்ந்து கற்றளியின் அடுத்தகட்ட செயல் திட்டம் குறித்து விரிவாக விவாதித்தோம். பழங்குடி மக்களின் வாழ்வியலை ஆவணப்படுத்தி அதை பாதுகாப்பாக அம்மக்களிடமே கையளிக்க வேண்டியது அவசியம் என்றும். அவர்களுக்கு அளிக்கப்படும் நவீனகல்வி மற்றும் வேலைவாய்ப்பு எவ்வகையிலும் அவர்களது வாழ்வியலுக்குள் இருக்கும் இறையாண்மையை அழிந்து விடாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், அவற்றிற்கு வலு சேர்க்கும் விதமாக கற்றளியில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் அமைய வேண்டும் என்று உறுதிபூண்டோம்.
புகைப்படங்கள்: மோகன் தனிஷ்க். அய்யலு குமரன்.
Leave a comment